Friday, October 17, 2008

விருதே ஒரு பாரியா ( மலையாளம் )

விருதே ஒரு பாரியா - போன வாரம் இந்த மலையாளம் படத்தை மலையாளிகளோடு பார்த்தேன். வழக்கம் போல மலையாளிகளோடு பேசியதில் படத்தை பற்றி சில விஷயங்களை சொன்னார்கள்.

ஒன்று : படம் முழுக்க முழுக்க சீனிவாசனின் நடிப்பையும் , திரைப்படங்களையும் (குறிப்பாக வடக்கு நோக்கி எந்திரம் ) நினைவு படுத்துகின்றன. (அதாவது நகைச்சுவையும் ஜெயராமின் வசனங்களும் )

ஒரு சில காட்சிகள் அப்படி இருந்தாலும் , எனக்கென்னவோ இந்த படம் சீனிவாசனை நினைவு படுத்தவில்லை. ஏன் என்றால் சீனிவாசனின் நக்கல் மற்றும் நையாண்டி நேரடியாக அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தையும் , பொது மக்களின் கையாலாகாத தனத்தை தாக்குவதாக இருக்கும். தைரியமாக சீனிவாசன் கருத்து சொல்லக் கூடியவர். எந்த இயக்குனராக இருந்தாலும் சீனிவாசன் தனித்து நிற்பதற்கே இதுவே காரணம்.

ஆனால் ஜெயராமோ அல்லது இயக்குனரோ தைர்யமாக நில்லாமல், முல்லைப் பெரியாரை பற்றி குடித்து விட்டு உளறுவதாக கட்சியை அமைத்து விட்டார்கள். ( கருத்து எதுவும் சொல்லாத நிலையில் , முல்லைப் பெரியார் என்ற ஒரு வார்த்தைக்கு கைத்தட்டியது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. ) அதை போலவே நகைச்சுவை காட்சிகளும் சீனிவாசனை நினைவு படுத்த வில்லை. அவை வழக்கமான ஜெயராமின் காட்சிகளே எனலாம்.

இரண்டு : மறு பாதியில் படம் ஒரே பிரச்சனையில் நின்று விட்டது என்றார்கள்.



அந்த செய்தி தான் திரைப்படத்தில் இயக்குனர் சொல்ல வந்தது என்றே நான் நினைக்கிறேன்.

பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அஷ்டாவதானியாக உருமாறி தீர்ப்பவர்கள் பெண்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. ஒரு பிரச்சனை வந்தால் அதை விட்டு வெளியே வருவதற்குள் , அவர்கள் விழி பிதுங்கி விடும் .

அது போலவே முதல் பாதியில் கோபிகா பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கிறார். மறு பாதியில் ஜெயரமோ ஒரே பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தீர்க்க முடியாமல் அவஸ்தை படுகிறார்.

மொத்தத்தில் இயக்குனர் கதையை போரடிக்காமல் எடுத்து இருந்தார் என்றே சொல்லலாம்.

கோபிகா அவமானம் மற்றும் பிரச்சனை நடக்கும் பொது , பிரச்சனையை பெரிதாக்காமல் , நின்று யோசித்து , பேசி , பின் வீட்டை விட்டு வெளியேறுவது ,

அது போல மின்சார துறைக்காக பொது மக்களிடம் போராடும் பொறுப்பான ஜெயராம் , அலுவலகத்தில் பொறுப்பில்லாமல் நடப்பது மற்றும்

அனாதையான ஜெயராம் உறவுக்கு அலைபவராக இல்லாமல் , உறவுகளை அவமதிப்பவராக இருப்பது என பாத்திரங்களை படைத்து இருந்தார் இயக்குனர்

அன்புடன்
கே ஆர் பி

Friday, September 5, 2008

ரம்பை மேனகை ஊர்வசி

ரம்பை , மேனகை , ஊர்வசி

மும்பையின் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் " சொர்க்கம் மது விடுதி " மதுவுடன் பெண்களின் நடனமும் உண்டு என்பதால் , எப்போதும் அரங்கு நிறைந்தே காணப்படும். அதுவும் விடுமுறை நாட்களுக்கு முந்தைய தினம் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால் நான் விடுமுறை நாட்களில் செல்வதில்லை. புதுப் பாடகர்கள் மற்றும் பெண்கள் வந்தவுடன் எனக்கு எப்படியாவது தகவல் வந்து விடும். வழக்கம் போல இன்றும் தகவல் வந்தது.

பாதி இருளிலும், பாதி வெளிச்சத்திலும் இருந்த அந்த விடுதியில் எனக்கான இடத்தில் யாருமில்லை . யார் இருந்தாலும் அவர்கள் போகும் வரை நான் காத்திருந்து அமர்வதால் , எனக்கான இடம் ( விடுதி பணியாளர்களின் உதவியால் ) நிறைய நேரங்களில் காலியாகவே இருக்கும். நான் அப்போதுதான் கவனித்தேன் இரண்டாவது இருந்த அந்த பெண் மட்டும் குனிந்த படி யோசனையில் இருப்பதை. அடுத்த பாட்டுக்கு இரண்டு பெண்களுடன் ஆடிய அவள் மீண்டும் ஏதோ யோசனையுடன் குனிந்தபடி இருந்தாள்.

அடுத்தடுத்து பாடல்களுக்கு ஆடிய அவளுக்கு ஆறேழு தாள்களை அளித்தேன் . இப்போது என்னை பார்த்து எளிய தாய் ஒரு புன்னகை . விடுதி மேலாளரிடம் என்னுடைய கை பேசி என்னை எழுதி கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னேன். அவளுடைய என்னை மேலாளரே என்னிடம் கொடுத்து விட்டார். காலை ஆறு மணிக்கு போன் செய்யுமாறு அவளிடம் செய்கையில் சொன்னேன்.

சிறிது நேரத்தில் விடுதியை விட்டு வெளியே வந்தவன் அறைக்கு சென்று உடனே தூங்கி விட்டேன். திடீரென விழித்து மணி பார்த்தேன் எட்டு . அந்த பெண்ணின் நினைவுடன் கை பேசி எடுத்து அவளின் அழைப்பு இருக்கிறதா என தேடினேன் . ஒன்றுமில்லை. சிறிது நேரம் யோசித்தவன் நானே அவளுடைய கைபேசியில் அழைத்தேன்.

வெகு நேரம் கழித்து எடுத்தவள் ,யாரென தெரியாததால் சிறிது பதட்டமாகவே இருந்தாள் . என்னை அறிமுகம் செய்தவுடன் இயல்பாய் பேசி , தன்னையும் அறிமுக படுத்தி பேச தொடங்கினால்.

ஏன் காலையில் பேசவில்லை என்றேன் ? என்னோடு பேசுபவர்கள் சிறிதும் யோசிக்காமல் தப்பு தப்பாக பேசுகிறார்கள். அதானால் நான் யாரோடும் பேசுவதில்லை ஏன்? என்னாயிற்று என்றேன் ? நான் மது விடுதியில் நடனம் ஆடுகிறேன். என்பதால் தப்பான பெண்ணில்லை . என்னுடை பணக் கஷ்டத்திற்காக வந்திருக்கிறேன் . இந்த ஆண்களே மோசம் . அலைகிறார்கள் என்றவள் , திடீரென நினவு வந்தவளாக , நான் உங்களை சொல்ல வில்லை என்றவள் மேலும் தொடர்ந்தாள் .

என்னை பார்த்த சில வினாடிகளில் அவர்களுக்கு எப்படித்தான் என்னை பிடிக்கிறதோ ? நீ தான் அழகி என்கிறார்கள் . என்னவெல்லாமோ பேசுகிறார்கள். தேவைப்பட்டால் தப்பான பெண்கள் தான் இருக்கிறார்களே அங்கு போக வேண்டியதுதானே இங்கே ஏன் வருகிறார்கள் என்றவள் எனக்கு பிடிக்க வில்லை , நான் இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவேன் என்றால் கோபம் மாறாமல்.

இப்போது நான் பேசலாமா என்று கேட்டேன் ? நீ இந்த விடுதிக்கு மட்டுமல்ல , நடனம் ஆடவே புதுசா வந்திருக்கிறே என்று நினைக்கிறேன் சரிதானா? ஆமாம் என்றவள் அதற்கும் நான் பேசியதற்கும் என்ன சம்பந்தம் என்றால்.

இங்கே வருபவர்கள் எல்லாம் ஊரை விட்டு வேலைக்காக வந்தவர்கள் . நிறைய நேரங்களில் தனிமையில் இருப்பவர்கள் . ஊரைப்பற்றிய , உறவைப்பற்றிய நினைவுகளுடன் மட்டும் வாழ்பவர்கள் .


அவர்களோடு பேசவோ அவர்களை கவனிக்கவோ ஆட்கள் இல்லாதவர்கள்.
சாப்பிட்டாச்சா என்று கூட கேட்க ஆள் இல்லாதவர்கள். அவர்களுக்கு பேச ஆட்கள் தேவை. அதனால் தான் உன்னிடம் பேசுகிறார்கள்.

நீ சொன்னது போல தப்பான பெண்ணை தேடி போக ரொம்ப நேரம் ஆகாது. இன்னும் சொல்லப் போனால் இந்த விடுதியில் செலவழிக்கிற தொகையில் அதுவும் உனக்காக செலவழிக்கிற தொகையில் பத்தில் ஒரு பங்கு செலவழித்தாலே உன்னை விட அழகான பெண்கள் கிடைப்பார்கள். ஆனால் அந்த பெண்கள் , அவனிடம் அவனது பெயரை கூட கேட்க மாட்டார்கள் . இப்போது புரிகிறதா என்றேன்? அவளிடம் அமைதியே பதிலாக இருந்தது.

இந்த விடுதியில் இருக்கிற ஆறேழு பெண்களில் நீ தான் அழகியா என்றேன்? இல்லை என்னை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்றாள் . உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா என்றேன் ? இல்லை என்றாள்.
கல்யாணத்துக்கு பெண் தேடும் பொது எப்படி அம்மா போல பெண் வேண்டும் , தனது சகோதரி போல பெண் வேண்டும் , இல்லை தனக்கு தெரிந்த பெண்களைப்போல பெண் வேண்டும் என நினைப்பவன் , இங்கேயும் அது போல தேடுகிறான். அவனது முன்னாள் காதலியை போல கூட நீ இருக்கலாம் .


அவன் மனதுக்கு பிடித்த யாரோ ஒரு பெண்ணை போல நீ இருக்கிறாய். உன்னை பிடித்து இருக்கிறது என்பவனிடம் கேள். இது போல் பதில் தான் கட்டாயம் வரும். அவளிடம் இப்போதும் அமைதியே பதில்.
யாராவது அன்போடு பேசுவார்களா என்று தான் உன்னை தேடி வருகிறார்கள்.

நீ நினைப்பது போல இங்கே விற்பனையாவது மதுவோ உன்னுடைய கவர்ச்சி நடனமோ இல்லை. இங்கே விற்பனை ஆவதும் , வாங்கப்படுவதும் அன்பு தான் . அவளிடம் இருந்து இப்போது பேச்சே இல்லை.

பணத்திற்காக வந்தவள் நீ , திரும்பி போவதினால் உன்னுடைய கஷ்டம் தீராது. திரும்பி போகமாட்டேன் என்பதுதான் உன் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன் . எதற்கும் நான் சாயங்காலம் பேசுகிறேன் என்று கூறி கைபேசியை வைத்து விட்டேன்.

மீண்டும் படுத்தேன் ஆனால் இம்முறை உறக்கம் வரவில்லை. அவளின் நினைவாகவே இருந்தது. மறுமுறை அவளை அழைக்கலாமா என்று கூட தோணியது. ஆனால் அழைக்கவில்லை.
எதோ மனதை அழுத்தியது.
==============================================================
சாயங்காலம் ஆறு மணிக்கு கை பேசி அழைத்தது. அவளாக இருக்கும் என்றும் நினைத்து எடுத்து பார்த்தேன் . ஆனால் அழைத்தது முதலாளி. அந்த பொண்ணு வந்துச்சு தம்பி. மூணு மாசம் இருந்து ஆடிட்டு போறேன்னு சொல்லிடுச்சு என்றார். நான் எதோ கேட்க ஆரம்பிக்கு முன் அவரே தொடர்ந்தார் .
தம்பி ! நான் ஒரு வியாபாரி. ஆனா எந்த பொன்னையும் நான் தேடி போனதில்லை , அவங்களா வந்து நான் ஆடறேன்னு சொல்றாங்க. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை முன் பணமா கொடுத்து ,
நான் கூட்டிட்டு வர்றேன் . இருந்தும் இங்க வந்த வுடனே அவர்களுக்கு மனசு மாறுது, எனக்கு புடிக்கலை நான் போறேன்னு சொல்லும் பொது சில நேரம் கோவம் வரும் ,

திருப்பி அனுப்பினா கை நட்டம் . கை நட்டத்தை விட உனக்கு கொடுக்கிறே பணம் ரொம்ப குறைவு தான் , அதனால தான் உன்னை தேடி வர வேண்டியதாருக்கு என்றார். இப்போ எவ்வளவு பணம் வேணும் என்றவரை , இடை மறித்து இல்லை முதலாளி பணம் வேண்டாம் என்றேன். திடுக்கிட்ட முதலாளி ஏன் என்ன ஆச்சு ? என்றார்.

ஒவ்வொரு முறை நான் பெண்களோடு பேசும் போதும் , சில வினாடிகளில் அவங்க நிலை தெரிஞ்சுடும் . அந்த பெண்கள் எல்லாம் மது விடுதியை பத்தி தெரிஞ்சவங்க . விதம் விதமான மன நிலைகளோட வர்ற ஆம்பளைகளை சமாளிக்க முடியாம திணறி நிப்பாங்க . அவர்களை சமாளிப்பது எப்படின்னு சில நேரம் பேசுவேன். அவ்வளவு தான்.

இன்னும் சொல்லப் போனா ஆம்பளைகளை எப்படி ஏமாற்றுவது , என்று கூட சொல்லி கொடுத்து இருக்கிறேன். ஆனா இந்த முறை வந்த நடனம் ஆட வந்த பெண்ணையே ஏமாற்றியது எனக்கு கஷ்டமா இருந்தது . இந்த பெண் மது விடுதியை பத்தி தெரியாதவள். எதோ பணக் கஷ்டத்தில் வந்து விட்டால், மாற்ற படி இந்த தொழிலை பற்றி அறியாதவள் . அவளை திருப்பி அனுப்பிடலாம் முதலாளி என்றேன்.


நீங்கள் சொன்னது போல இந்த தொழிலை பற்றி தெரிந்து , நம்மை தேடி வந்தவர்களை ஆட வைப்போம். நாமாக யாரையும் இந்த தொழிலில் இழுக்க வேண்டாம் என்று கூறி கை பேசியை வைத்து விட்டேன் .
அழுத்திய சுமை இப்போது விலகியது.
=============================================================

Sunday, June 8, 2008

அண்ணாச்சி கடையும் ஆளுயர தராசும்

அண்ணாச்சி கடையும் ஆளுயர தராசும்

எந்த ஒரு வியாபார நிறுவனத்தின் உள்ளே நுழைந்தாலும் , அடையாளமாக முதலில் தெரிவது அங்கே தொங்கும் பெரிய தராசு தான். ஒரு வியாபாரியின் அடையாளமும் அதுதான்.

முதலாளியின் நேர் எதிராக தராசும், கைப் பக்கமாக பணப் பெட்டி அல்லது
முதலாளிக்கு முன்னால் பணப் பெட்டி கைப் பக்கமாக தராசு இதுதான் கடையின் முதலாளி அடையாளம்.

இந்த மின்னனு தராசு வந்தாலும் வந்தது , முதலாளிக்கு முன்னால் இருந்த (அல்லது இருக்க வேண்டிய ) தராசு , மின்சார வசதிவுள்ள பக்கம் சென்று விட்டது.

எந்த பொருளையும் நம் கண் முன்னே எடை போட்ட காலம் இப்போது இல்லை . இந்த அவசர உலகத்தில் அதற்கு யாருக்கும் நேரமில்லை.

தராசு எங்கே என்று கேட்டால் கடைக்கு பின்னால் அல்லது கிட்டங்கியில் இருக்கிறது என்கிறார்கள்.

இரண்டு தட்டுகள் இருந்த தராசில் (கடைக்காரர் தட்டு மற்றும் வாடிக்கையாளர் தட்டு ) இப்போது ஒரு தட்டு .

இப்படி காணாமல் போன கைத் தராசுகள் பற்றி, தராசு உற்பத்தி செய்யும் நண்பரிடம் விசாரித்த பொது அவர் அளித்த விளக்கம் :

உலகமய மாக்களின் பொது , பொருட்களின் தரத்தை விட , அதன் தோற்றம் பற்றிய அக்கறை அதிகமாகிப் போனது . மூட்டை மூட்டையாக பொருட்களை அனுப்பிய உற்பத்தியாளர்கள், தற்போது அதனை அவர்களே (உற்பத்தியாளர்கள் ) தேவையான சிறு சிறு அளவில் எடை போட்டு நன்றாக அலங்கரித்து அனுப்பி வைத்தனர் . இதுதான் முதற் பெரும் காரணம் . ( உலகமய மாக்களில் சிறு சிறு கடைகளே குறைந்து போயின அது தனி பதிவு )

இரண்டாவதாக தராசு உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம் .


மூன்றாவதாக வந்தது தான் இந்த மின்னணு தராசுகள் .

நான்காவதாக மக்கள் ( இவர்களை சொல்லவில்லை என்றால் எப்படி) மின்னணு தராசில்
தான் எடை சரியாக இருக்கும் என்ற மக்களின் தவறான எண்ணம். (வாடிக்கையாளர் நல அமைப்பை சேர்ந்தவர்களை கேட்டால் , மின்னணு தராசில் நடக்கும் தவறுகளை சொல்வார்கள் )

வியாபார நிறுவனங்கள் , பழக கடைகள் , காய்கறி சந்தைகள் , பழைய பேப்பர் கடைகள் இப்படி எல்லா இடங்களிலும் இப்போது மின்னணு தராசு தான் , நடமாடும் கடைகள் தவிர .

பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குவது போல, கடையின் உள்ளே தொங்கிய தராசு (வியாபாரியின் அடையாளம் ) இப்போது இல்லை.

அன்புடன்
கே ஆர் பி

Thursday, May 22, 2008

போடுங்கம்மா ஓட்டு

போடுங்கம்மா ஓட்டு

வ வா சங்கத்து போட்டியில் தங்களுக்கு பிடித்த படைப்புக்கு வாக்களியுங்கள்
ஓட்டு போடுவது நமது கடமை மட்டுமல்ல , நமது ( நமக்கு நல்லன கிடைப்பதற்கான ) உரிமையும் கூட .

எதுவுமே பிடிக்கலைன்னா ?
அரசியல் போலத்தான் இருப்பதில் சிறந்ததை தேர்வு செய்வது .

இனி சுய புராணம் .
என்னுடைய பதிவை படித்தீர்களா ? ரசித்தீர்களா ? பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.
http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post.html
http://visitmiletus.blogspot.com/2008/04/blog-post_24.html

பிற அல்லது மற்ற ( எது சரி ? ) பதிவர்களின் படைப்புகளுக்கும்,
தங்கள் பொன்னான வாக்கை பதிப்பதற்கும்
http://vavaasangam.blogspot.com/2008/05/blog-post_20.html


அரசியல் , தேர்தல் , வாக்குகள் என்றாலே இந்த திரைப்படமும், இந்த காட்சியும் கண்டிப்பாக நினைவுக்கு வருகின்றன. நீங்களும் ரசியுங்கள் !!!!!
http://www.youtube.com/watch?v=OF5ZhSzOyZs

அன்புடன்
கே ஆர் பி

Wednesday, May 7, 2008

குசேலன் – ரஜினி ஆசைப்பட்ட சினிமா

குசேலன் – ரஜினி ஆசைப்பட்ட சினிமா

குசேலன் படப்பிடிப்பு துவக்கம்
ரஜினிக்காக கதையில் மாற்றம்
பல கோடிக்கு வியாபாரம்
கமல் நடிக்கிறார்
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்
ஜுலையில் படம் வெளியாகும்

குசெலனைப் பற்றிய செய்திகள் வரத்துவங்கி விட்டது .

எல்லாம் சரி . குசேலன் - ரஜினி ஆசைப்பட்ட “ கதா பறையும் போல் ” படம் போல இருக்குமா ?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( மக்களுக்கு ) சொன்னது :-

பிரபலமான ஒரு நடிகர் (தனிப்பட்ட வாழ்க்கையில் ) தான் நடிகராக உதவிய , மற்றும் தன்னுடைய பால்யத்தில் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட ஒரு மனிதன் மேல் இருக்கும் அன்பு அல்லது நன்றியை பற்றியது . (இது ரஜினிக்கு முழுமையாக பொருந்தும் )

ஆனால் அந்த நடிகர் தனது நடிப்பு தொழிலில் அல்லது பொது வாழ்க்கையில் , அவர் எளிதில் கான அல்லது நெருங்க முடியாதவராக , ஒரு நடிகராகத்தான் இருக்கிறார் . (இது ரஜினிக்கு பொருந்துமா ? )

“ என்னைப்பற்றிய படம் ” என்று கண்டிப்பாக ரஜினி இதற்கு ஆசைபட்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( திரை உலகினருக்கு ) சொன்னது :-

ஊடகங்கள் அனைத்துமே மக்களுக்கானது .சினிமா என்பது ஒரு எளிய ஊடகமாக இருக்க வேண்டும் . மிக எளிமையான கதை , வசனம் , நடிப்பு , நடிகர்கள் , நடிகைகள் , குறைந்த முதலீடு . சீனிவாசனின் அனைத்து திரைப் படங்களிலும் உள்ள செய்தி இது தான் .

சீனிவாசனின் அனைத்து படங்களையும் பார்த்தவர்களுக்கு இது புரியும் .
ஒரு வேலை ரஜினி இதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்பார் என்றே நான் நம்புகிறேன்.

பணத்தில் புரள வேண்டிய கதையோ அல்லது திரைப்படமோ , கண்டிப்பாக இது இல்லை .

ஆனால் மீண்டும் மீண்டும் திரை உலகினர் சினிமா என்பது எளிய மக்களுக்கானது இல்லை என்றே நிரூபித்து வருகிறார்கள் .

ஒருவேளை ரஜினி ஆசைப்படாமல் இருந்திருந்தால் , ஒரு புதிய தயாரிப்பாளர் அல்லது அறிமுக இயக்குனர் இதை முயற்சி செய்திருப்பார் .

ரஜினி ஆசைப்பட்ட ஒரே காரணத்தினால் மீண்டும் " சினிமா என்ற ஊடகம் எளிய மக்களுக்கானது இல்லை " என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த கோடம்பாக்க வல்லுனர்கள் தங்கள் கைப்பக்குவத்தையும் திறமையையும் வேறு எதாவது ( நல்ல ) படங்களில் காட்டியிருக்கலாம்

இனிமேல்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ரஜினி இனிமேலும் இது போன்ற எளிய திரைப் படங்களின் மீது ஆசைப்பட மாட்டார் என்றே நம்புவோமாக .

ரஜினி “ கதா பறையும் போல் “ படத்தை பலமுறை பார்த்ததாக பெட்டியில் தெரிவித்து இருந்த்தார் . குசேலன் வெளியாகிற தினத்தன்று " கதா பறையும் போல் " படத்தை மீண்டும் ஒரு பார்த்தால் நன்றாக இருக்கும்

இனிமேலும் இது போன்ற நல்ல எளிய சினிமாக்கள் , தமிழில் வர்ணம் பூசி , வேறு வடிவம் எடுக்குமானால் , அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ் சினிமாவை எளிய ஊடகமாக மாற்ற முடியாது .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
கே ஆர் பி

Thursday, May 1, 2008

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

வ வா சங்கத்து போட்டிக்கான எனது ரெண்டாவது பதிவு

இந்த வாரம் ஊருக்கு வரணும்னு போன் வரும்போதே நினைச்சேன் இந்த தடவையும் பொண்ணு பார்க்க வரப்போராங்கன்னு .

நான் நினைச்சதும் சரியா தான் இருந்தது , சாந்தி அக்கா தான் வாசல்லையே நின்னுச்சே. தெரு முக்குலே திரும்பும் போதே , என்னைய பார்த்துட்ட அக்கா , பாதி தூரம் வந்துருச்சு. ரயில் இப்பத்தான் வந்ததா கேட்டுக்கிட்டே என் பெட்டியை கையில வாங்கிட்டு வீட்டுக்கு உள்ள போயிருச்சு . என்னோட அறைக்கு போயி நான் நைட்டியை தேடி எடுத்து மாத்தறதுக்குள்ளே காப்பியை கொண்டு வந்து கொடுத்துருச்சு . அதான் சாந்தி அக்கா.

வீட்டுல என்ன விசெஷம்னாலும் சாந்தி அக்கா இல்லைன்னா , அம்மாவுக்கு வேலையே ஓடாது. அக்கா கொஞ்சம் அம்மா வழி தூரத்து சொந்தம் . பக்கத்து தெருவுல இருந்தாலும் , அங்கன சோத்தபொங்கி வச்சுட்டு இங்க வந்துரும் . எங்க வீட்டுலயா இருக்கறதுனால அக்கா , அம்மாவுக்கு முக்கியமான ஆளு.

நான் குளிச்சுட்டு வர்றேக்கான்னு சொல்லும் போதே , சிரிச்சுக்கிட்டே
நாளைக்கு தான் பொண்ணு பார்க்க வாரங்கன்னு , சொல்லிட்டு உள்ள போயிருச்சு. அம்மாவும் , நாளைக்குத்தான் வர்றாங்க , நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா , திருச்செந்தூர் கோவிலுக்கு போவோம்னு சொல்லிக்கிட்டே உள்ள போய்ட்டாங்க .

பஸ்ல கூட்டம் அதிகம் இல்லை. எனக்கும் அம்மாவுக்கும் நாலாவது சீட்டுல தான் இடம் கிடைச்சுது. பஸ் கிளம்பின உடனேயே , அம்மாவுக்கு எதோ சிந்தனை , திரும்பி பார்த்தேன். என்னம்ம்மா திடீரென கொவிளுக்குன்னு கேட்டேன் , இந்த வரனாவது நல்ல படி அமையனும்னு தான் , நீவேனா தூக்கம் வந்தா தூங்குன்னு சொன்ன அம்மா முகத்திலே கவலைக்கொடுகள் .


ராத்திரி நல்ல தூக்கம் இல்லாததுனாலே , எனக்கும் அலுப்பா தான் இருந்தது. பஸ்ல நானும் நல்லா தூங்கிட்டேன். திடீரென முழிச்சு பார்த்தேன் , பஸ் நின்னுக்கிட்டு இருந்தது. என்னைய திரும்பி பார்த்த அம்மா , "அம்மன் புறம் ரயில்வே கேட்டு " ன்னு சொன்னாங்க.

கேட்டு கதவுல எதோ பிரச்சனையாம், பூட்டு திறக்க முடியலையாம் பக்கத்து சீட்டு பொம்பளை யார் கிட்டயோ சொல்லிக்கிட்டு இருந்தது. பஸ்சுக்கு உள்ளார பார்த்தா, உள்ள பாதி கூட்டம் தான் இருந்தது. மீதி கூட்டம் கீழ தான் இருந்தது.

நானும் இறங்கிட்டேன். அந்த பக்கம் இந்த பக்கம் கடையே இல்லை.
கொஞ்சம் தள்ளி ஒரு இளனி கடை , அதுக்கு பக்கத்துல ஒரு பொம்பளை கீழ உட்கார்ந்து ஓலை விசிறி செஞ்சுகிட்டு இருந்தது. பக்கத்துலேயே ஒரு தொட்டில்ல குழந்தை.

குழந்தையையும் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு , ஆள் இல்லாத நேரம் இளனி கடையை பார்த்துக்கிறதே ரொம்ப கஷ்டம் , இதுல விசிறி விற்பனை வேறயா ? , கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக கூடாதுன்கிற எண்ணம் இருந்த எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்தது. என்னால முடியலை , பக்கத்துல போயி அந்த பொண்ணு கிட்டே கேட்டுட்டேன்.

அவள் சொன்னது இது தான் " இந்த விசிறி செய்யறது எங்க மாமியார் தான் சொல்லி கொடுத்தது. ஒரு விசிறி செஞ்சா முக்கா ரூபா கிடைக்கும். அவ்வளவுதான். ரெண்டு மாசம் மத்த வேலையோட விசிறியும் செய்யறது கொஞ்சம் கஷ்டம் தான் , ஆனா "நான் சொந்த காலுல நிக்கறதே வருஷத்துல இந்த ரெண்டு மாசம் தான் " அதனால தான் கல்யாணத்துல இருந்தே இதை விடாம செஞ்சுக்கிட்டு இருக்கேன் "


எனக்கு அதுக்கு மேல என்ன பேசறதுன்னே தெரியலை. நான் திரும்பி வந்துட்டேன்.

நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போவேன்னு , நாளைக்கு வர்றவங்க கிட்டே சொல்லிரும்மா, என்ற என்னை பார்த்த அம்மா முகத்தில் இம்முறை கவலைக் கோலங்கள் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
கே ஆர் பி

=============================================================
மலையாள தனியார் தொலைக் காட்சி செய்திகள் ஓலை பின்னும் பெண்களை இரண்டு நிமிடம் காட்டினார்கள். அடுத்த இருபத்து நிமிடத்தில் விளைந்த கற்பனை .

கதை வெறும் மூன்று மணி நேரம் என்பதால் ஆண் கதா பாத்திரங்கள் தேவைப் படவில்லை . (மூன்று பேருக்குமே கணவர்கள் இருந்தாலும் அவர்களைப் பற்றி சொல்லப் படவில்லை ) .

அனைத்துமே பெண் பாத்திரங்களாக அமைந்தன . (மாப்பிள்ளை வீட்டுக் காரர்கள் வருகிறார்கள் என்று கூட சொல்லாமல், பெண் பார்க்க வருகிறார்கள் என்றே எழுதினேன் )

எந்த பெண்ணைப் பற்றிய கதை என்றே தெரியக் கூடாது என்பதற்காக , அனைவரையுமே சரி சமமாக எழுத முயற்சித்தேன்.

மாமியாரும் மருமகளும் எப்படிப்பட்ட வராக இருந்தாலும் , பெண் விடுதலை , பெண் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் ஒரே எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது என் எண்ணம் .

=============================================================

Saturday, April 26, 2008

ரெண்டு கதா நாயகர்கள் - கதா நாயகர்களின் ரெண்டு வேடங்கள்

முதல் பதிவு : VISIT MILETUS: கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!

ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சியும்
கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சியும்

( வ வா சங்கத்து போட்டிக்கான பதிவு இல்லை )

ஒன்று : ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சி

தமிழ்த் திரைப்படங்களின் ஜாம்பவான்களான எம் ஜி ஆர் , சிவாஜி ஆகிய இருவரின் கால கட்டங்களில் சிறப்பாக இருந்த ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் கமல் ரஜினி ஆகிய இருவரின் வரவுக்கு பின்னரும் நன்றாகத்தான் இருந்தது . இருவரும் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்த பின்னரே வீழ்ச்சி அடையத் துவங்கியது .

காரணங்கள் பலவாக இருந்தாலும் எனக்கு தெரிந்த சில காரணங்களை பட்டியல் இடுகிறேன் .

ஆரம்பங்களில் கதா நாயகனின் முழு வாழ்க்கையையும் சித்தரித்த தமிழ் சினிமா பின்னாளில் கதாநாயகனின் வாழ்க்கையில் நடந்த குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் காட்டியது .

சமுதாயத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பானது சிதைந்து , தனிக்குடித்தனம் உருவான பொது அது நம் திரைப்படங்களிலும் பிரதி பலித்தது . கூட்டுக்குடும்ப கதையாக இருந்தால் குறைந்த பட்சம் மூன்று கதாநாயகர்கள் பத்து குணசித்திர நடிகர்களாவது இருப்பார்கள் . ஆனால் பின்னாளில் நடந்ததே வேறு கதையும் சுருங்கி திரையில் நடிப்பவர்களும் (எண்ணிக்கையில்) குறைந்தனர். ( கலையில் ஏற்படும் மாற்றம் கலாச்சாரத்திலும் , கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றம் கலையிலும் பிரதி பலிப்பதும் இயல்பே. )

ரெண்டு கதா நாயகர்கள் என்றால் , ஒருவருக்கு ஒருவர் இணையான கதா நாயகர்களால் இருந்தால் மட்டுமே திரைப்படம் சிறப்பாக அமையும் . எம் ஜி ஆர் , சிவாஜி (அதிகம் இணைந்து நடிக்க வில்லை என்றாலும் கூட ) அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் கூட மற்றவர்களுக்காக (ஜெமினி கணேசன் எஸ் எஸ் ராஜேந்திரன் பாலாஜி ஏ வி எம் ராஜன் மற்றும் பலர் ) சிறப்பான பாத்திரங்களை ஒதுக்கினர் . ஆனால் கமல் ரஜினி இருவரும் அதிக பட்சம் தங்கள் படங்களில் சேர்த்துக் கொண்டதே , சரத் பாபுவை மட்டும் தான் .

(சில படங்கள் : " பார்த்தால் பசி தீரும் " ஒன்று போதாதா?
/ பாச மலர் / படித்தால் மட்டும் போதுமா / அவள் அப்படித்தான் / நினைத்தாலே இனிக்கும் / இளமை ஊஞ்சலாடுகிறது / அவர்கள் / பதினாறு வயதினிலே , சின்ன தம்பி பெரிய தம்பி / அக்னி நட்சத்திரம் / குருதிப் புனல் / பிரண்ட்ஸ் )


பின்னர் திரையுலகினர் கண்டு பிடித்த " பஞ்ச் " எனப்படும் பேஜாரான வசனங்களால் ரெண்டு கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது.

அது தவிர ரெண்டு கதா நாயகர்கள் என்றால் ரெண்டு பேருக்கும் இணையான சம்பளம் , உடைகள் , தாங்கும் வசதி , சண்டைக் காட்சிகள் , பாடல்கள் , துணை / இணை வசதிகள் உள்பட (இணையான ) முக்கிய நடிகைகள் என தயாரிப்பாளரும் இயக்குனரும் திக்கித் திணறி , தட்டுத் தடுமாறினர் .

அவ்வப்போது தமிழில் சத்யராஜ்-பிரபு, பிரபு-கார்த்திக் , விஜய்-சூர்யா என படங்கள் வந்திருந்தாலும் அது அதிக எண்ணிக்கையில் இல்லை என்றே சொல்லலாம்.

மலையாளத்திலும் இந்தியிலும் இன்றும் ரெண்டு மூன்று கதா நாயகர்கள் நடித்த நல்ல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி அடைகின்றன.

முக்கியமாக மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன . அதே போன்ற திரைப்படங்கள் தமிழில் தற்போது வெளி வராதது வேதனையே .


இரண்டு : கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சி

(ஆண்டவன் ஒரு வழியை அடித்தால் மற்றொரு வழியை திறப்பான் என்பது போல , தவறாக தீர்ப்பு எழுதியவர்களே அதை திருத்தி எழுதுவது போல ) தமிழ் சினிமா ரெட்டை நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் குறைந்தவுடன் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்தன .

ரெண்டு நாயகர்கள் இல்லை என்றானவுடன் கதைக்கு தேவைப்படும் மற்றொரு முக்கிய பாத்திரத்தை தாங்களே ஏற்று நடித்தனர் .

ரெட்டை வேடங்களிலும் வித்தியாசமான முகத் தோற்றம் , பேச்சு , உடை என பெரும் புதுமைகள் நடந்தது . அதில் பெரும் பங்கு கமல் ஹாசனையே சேரும் . உதாரணமாக கல்யாண ராமன் அபூர்வ சகோதரர்கள் (அப்பு )


விரைவில் முன்னணி நடிகராக மாற ரெட்டை வேடங்கள் பெரிதும் துணை புரிந்தன . அதில் வெகு சீக்கிரத்தில் பலனும் அடைந்தவர் நடிகர் சரத் குமார் மட்டுமே .


தற்போது ரெட்டை வேடங்களையும் தாண்டி மூன்று , நான்கு என தொடங்கி பத்து வரை வந்து விட்டது . இந்த நிலை தொடர்ந்தாள் நம்ம " ச்சின்ன பையன் " சொன்னது போலாகி விடும் . ( நன்றி ச்சின்ன பையன் -
http://boochandi.blogspot.com/2008/04/2030.html )


திரைப்படங்களில் ( கதைக்கு தேவை இல்லாத பட்சத்தில் ) நாயகர்களின் ரெட்டை வேடங்கள் குறைந்து , (கதைக்கு தேவைப் படுமெனில் ) ரெண்டு கதா நாயகர்களின் திரைப்படங்கள் வருவது எப்போது ?

அன்புடன்
கே ஆர் பி