Friday, October 17, 2008

விருதே ஒரு பாரியா ( மலையாளம் )

விருதே ஒரு பாரியா - போன வாரம் இந்த மலையாளம் படத்தை மலையாளிகளோடு பார்த்தேன். வழக்கம் போல மலையாளிகளோடு பேசியதில் படத்தை பற்றி சில விஷயங்களை சொன்னார்கள்.

ஒன்று : படம் முழுக்க முழுக்க சீனிவாசனின் நடிப்பையும் , திரைப்படங்களையும் (குறிப்பாக வடக்கு நோக்கி எந்திரம் ) நினைவு படுத்துகின்றன. (அதாவது நகைச்சுவையும் ஜெயராமின் வசனங்களும் )

ஒரு சில காட்சிகள் அப்படி இருந்தாலும் , எனக்கென்னவோ இந்த படம் சீனிவாசனை நினைவு படுத்தவில்லை. ஏன் என்றால் சீனிவாசனின் நக்கல் மற்றும் நையாண்டி நேரடியாக அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தையும் , பொது மக்களின் கையாலாகாத தனத்தை தாக்குவதாக இருக்கும். தைரியமாக சீனிவாசன் கருத்து சொல்லக் கூடியவர். எந்த இயக்குனராக இருந்தாலும் சீனிவாசன் தனித்து நிற்பதற்கே இதுவே காரணம்.

ஆனால் ஜெயராமோ அல்லது இயக்குனரோ தைர்யமாக நில்லாமல், முல்லைப் பெரியாரை பற்றி குடித்து விட்டு உளறுவதாக கட்சியை அமைத்து விட்டார்கள். ( கருத்து எதுவும் சொல்லாத நிலையில் , முல்லைப் பெரியார் என்ற ஒரு வார்த்தைக்கு கைத்தட்டியது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. ) அதை போலவே நகைச்சுவை காட்சிகளும் சீனிவாசனை நினைவு படுத்த வில்லை. அவை வழக்கமான ஜெயராமின் காட்சிகளே எனலாம்.

இரண்டு : மறு பாதியில் படம் ஒரே பிரச்சனையில் நின்று விட்டது என்றார்கள்.



அந்த செய்தி தான் திரைப்படத்தில் இயக்குனர் சொல்ல வந்தது என்றே நான் நினைக்கிறேன்.

பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அஷ்டாவதானியாக உருமாறி தீர்ப்பவர்கள் பெண்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. ஒரு பிரச்சனை வந்தால் அதை விட்டு வெளியே வருவதற்குள் , அவர்கள் விழி பிதுங்கி விடும் .

அது போலவே முதல் பாதியில் கோபிகா பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கிறார். மறு பாதியில் ஜெயரமோ ஒரே பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தீர்க்க முடியாமல் அவஸ்தை படுகிறார்.

மொத்தத்தில் இயக்குனர் கதையை போரடிக்காமல் எடுத்து இருந்தார் என்றே சொல்லலாம்.

கோபிகா அவமானம் மற்றும் பிரச்சனை நடக்கும் பொது , பிரச்சனையை பெரிதாக்காமல் , நின்று யோசித்து , பேசி , பின் வீட்டை விட்டு வெளியேறுவது ,

அது போல மின்சார துறைக்காக பொது மக்களிடம் போராடும் பொறுப்பான ஜெயராம் , அலுவலகத்தில் பொறுப்பில்லாமல் நடப்பது மற்றும்

அனாதையான ஜெயராம் உறவுக்கு அலைபவராக இல்லாமல் , உறவுகளை அவமதிப்பவராக இருப்பது என பாத்திரங்களை படைத்து இருந்தார் இயக்குனர்

அன்புடன்
கே ஆர் பி